Loading...
Stella dhinakaran

தேவன் நம்மோடிருப்பதே மெய்யான மகிழ்ச்சி!

Sis. Stella Dhinakaran
12 Dec
அன்பானவர்களே, வாழ்வில் நாம் செய்கிற காரியங்கள் அனைத்திலும் வெற்றி சிறக்க வேண்டுமெனில், ஆண்டவர் நம்மோடிருக்கிறார் என்ற விசுவாசம் நமக்கு வேண்டும். ஆனால், நாம் எந்த காரியத்திலாகிலும் தோல்வி கண்டுவிட்டால் மனம் சோர்ந்து போகிறோம். ஏனென்றால், அந்த காரியம் மாத்திரமே நம்முடைய மனதில் வந்து செல்கிறது. “ஆண்டவர் என்னை கைவிட்டு விட்டார்” என்ற எண்ணம் வந்துவிடுகிறது. மனம் கலங்காதீர்கள், நம்பிக்கையோடிருங்கள். ஆண்டவர் உங்களோடுகூடவே இருக்கிறார். அவர் ஒருநாளும் உங்களை கைவிடமாட்டார். மேலும், உங்கள் தேவைகள் அனைத்தையும் அவர் அறிந்திருக்கிறார். “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவதுமில்லை” (எபிரெயர் 13:5) என்று அவரே கூறியிருக்கிறார். “ஆண்டவர் நம்மோடுகூட இருந்தால், அவருடைய குணாதிசயங்களும் நம் வாழ்வில் இறங்கும். “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்...” (கலாத்தியர் 5:22,23) ஆகிய ஆவியின் கனி நிறைந்த வாழ்வை தேவன்நமக்கு அருளி, நம்மைக் குறித்து மகிழ்ச்சியடைவார். அவர் நம்மை ஆசீர்வதிக்க ஆவலுள்ளவராகவே இருக்கிறார்.

அவர் உங்களை மாத்திரமல்ல, உங்கள் வீட்டையும் ஆசீர்வதிப்பார். அவர் உங்களுடைய பரம தகப்பன். அவரை நோக்கி கூப்பிடுவதற்கு தயங்காதீர்கள். உங்கள் இருதயத்தை அவரிடத்தில் ஊற்றிவிடுங்கள். “நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்” (2 கொரிந்தியர் 6:18).
ஒரு பெண்மணிக்கு பிரசவ நேரத்தில் உதவி செய்ய யாருமேயில்லை. பெற்றோரும், குடும்பத்தின் மக்களும் அவளை ஒதுக்கிவிட்டனர். கணவனும் அருகில் இல்லை. “ஐயோ, எனக்கு உதவி செய்ய யாருமேயில்லையே, நான் என்ன செய்வேன்?” என்று கலங்கியவாறே, “அப்பா, நீரே எனக்கு தாயும் தகப்பனுமாயிருக்கிறீர்! வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தராகிய உம்மிடமிருந்து எனக்கு ஒத்தாசை நிச்சயம் வரும் (சங்கீதம் 121:2) என்று நம்புகிறேன். என்னை காப்பாற்றும்” என்று கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தாள்.

அந்த நேரத்தில் வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் இந்த மழையில் யார் வந்து நமக்கு உதவிசெய்யப்போகிறார்கள் என்ற அவிசுவாசமும் கூடவே எழுந்தது. அடுத்த வினாடி, என் ஆண்டவர் பெரியவர்! அவர் என்னை ஒரு நாளும் கைவிடமாட்டார்! இந்த இக்கட்டான நேரத்தில் ஏற்ற உதவியை அனுப்புவார் என்ற விசுவாசம் அவளுக்குள் பொங்கி எழுந்தது! அச்சமயத்தில் வயதான ஒரு மூதாட்டி வாசற் கதவை தட்டினார்கள். மிகுந்த கஷ்டத்தில் கதவைத் திறந்தாள். “அம்மா, மழை கொட்டுகிறது, குளிரில் உடல் நடுங்குகிறது. நான் வீட்டிற்குள்ளே வரட்டுமா” என்றார்கள். “வாருங்கள்” என்று சொல்லி உள்ளே அழைத்தாள். அவளுடைய நிலைமையைக் கண்ட அந்த அம்மையார். ஒரு தாய் தன் மகளை கவனிப்பதுபோல அவளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் மிகுந்த பாசத்தோடு செய்தார்கள். யாதொரு கஷ்டமுமின்றி பிரசவம் சுகமாய் முடிந்தது; தாயும் சேயும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டார்கள்! எல்லாம் முடிந்த பிறகு அந்த அம்மையார் எங்கே என்று தேடியபோது, அவர்களை காணவில்லை. ஆண்டவரே அந்த அம்மையாரின் உருவில் வந்து தனக்கு உதவிசெய்ததை விளங்கிக் கொண்ட அந்த பெண், கர்த்தரை மனதாரத் துதித்தாள்.

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஆண்டவர் உங்களோடுகூடவே இருக்கிறார். எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும், பிரச்சினையிலும் அவர் உங்களைவிட்டு விலகவேமாட்டார். “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்கு செய்ய வல்லவர்” (எபேசியர் 3:20). ஆண்டவர் உங்களோடிருப்பாரானால், அவர் தருகிற சந்தோஷமும் சமாதானமும் என்றென்றும் நிலைத்திருக்கும்.  ஆகவே, கர்த்தராகிய இயேசு என்றென்றும் உங்களோடிருக்கும்படி, அவரை உறுதியாய் பற்றிக்கொள்ளுங்கள். அவர் உங்களை கைவிடமாட்டார். “கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு துணை செய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப் போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்....(ஏசாயா 50:7) என்ற வசனத்திற்படி, நீங்கள் தனிமையாயிருந்தாலும் சரி அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்தாலும் சரி ஆண்டவர் உங்களோடிருந்து உங்களுக்கு துணை செய்து உங்களை தேற்றுவார். 
Prayer:
என்னை நேசிக்கும் அன்பு பரமபிதாவே,
இயேசுவின் நாமத்தில் உம்மிடம் வருகிறேன்; நீரே எனக்கு ஆறுதலாகவும், என் காவலாகவும் இருக்கிறீர். எனவே உமக்கு நன்றி கூறுகிறேன். நான் சந்திக்கும் உபத்திரவங்கள் என்னை மேற்கொள்ளாதபடிக்கு என்னை காத்துக்கொள்ளும். உம்முடைய வலிமையான செட்டைகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும். நான் துவண்டுபோகாதபடிக்கு என்னை இரட்சித்துக்கொள்ளும். நீர் என்னை ஒருநாளும் கைவிடமாட்டீர் என்று விசுவாசிக்கிறேன். மீட்பர் இயேசுவின்மூலம் ஜெபம் ஏறெடுக்கிறேன் என் நல்ல தகப்பனே.
ஆமென்.

1800 425 7755 / 044-33 999 000